மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச்சேர்ந்த வணிகர்களான தந்தை மற்றும் மகன்களான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது நேற்று (ஜூலை.1) நடைபெற்றது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வீடியோ கான்பெரன்ஸிங் முறையில் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் வீடியோ கான்பெரன்ஸிங்கில் ஆஜராகினர்.
இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'உதய்பூர் கொலை: பயங்கரவாத அமைப்புக்குத்தொடர்பில்லை...ஆனால்':என்ஐஏ புதிய தகவல்!