மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருகின்ற தை முதல் நாள் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவை தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்த வேண்டும் என்று அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது.
உள்ளூரில் நிலவும் சிக்கல் காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசே முன்னின்று நடத்தியது. இதனையடுத்து வருகின்ற 2020ஆம் ஆண்டு தை முதல் நாள் நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழாவை அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடத்த வேண்டும் என உள்ளூர் இளைஞர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து, இளைஞர் நாகராஜன் கூறுகையில், "2020ஆம் ஆண்டு அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவை அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்த வேண்டும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவில் சில நபர்களால் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'அரசியல் சாசனத்தை மாற்றி மனுதர்மத்தை அமல்படுத்த பாஜக திட்டம்!'