மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருமலையூர் நகர் பகுதியில் வசிக்கும் கல் உடைக்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு அதிமுக சார்பாக கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதனை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை ராஜன் செல்லப்பா கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் மிக சிறப்பானதாக இருந்தாலும் பல இடங்களில் தொற்று நோய் இருக்கிறது.
இதனை அறிந்துகொண்டு முதலமைச்சர் கூறிய அறிவிப்பினை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நல்ல ஆலோசனை எதையும் தற்போதுவரை ஸ்டாலின் வழங்கவில்லை.
ஸ்டாலின் மக்கள் மீது நல்லெண்ணம் கொண்டு இதுவரை நல்ல கருத்தினைக் கூறவில்லை. அதிமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பைத் தருகின்றனர். இனியும் தருவார்கள் என நம்புகிறேன்.
மதுரையில் தொற்றுநோய் அதிகரிப்பதற்கு காரணம் வெளிமாவட்ட, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள்தான். இதனைக் கட்டுப்படுத்தும் சூழ்நிலையை மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: "தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி