பழைய ஓலைச்சுவடிகள், பழைய புத்தங்கள் வைத்திருப்போர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் அவற்றை டிஜிட்டல்மயமாக்கியப் பின்னர் திரும்பத் தருகிறோம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கு. கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
1960ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள மிகப்பழமையான நூல்களை மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்துறை டிஜிட்டல்மயமாக்கி-வருகிறது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் கு. கிருஷ்ணன், ''சென்னை பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக பழமைவாய்ந்தது மதுரை காமராசர் பல்கலைக் கழகம். 1966ஆம் ஆண்டிலேயே அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் சீரும் சிறப்பும் பெற்று நன்றாக வளர்ந்து பெரிய நிலையை அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரத்தின் பெயரில் தொடங்கப்பட்ட நூலகம் சிறந்த நூலகமாகக் கருதப்படுகிறது. இங்கே பழமைவாய்ந்த நூல்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றது என்றும் இந்த உலகத்தினுடைய பெருமையை மத்திய, மாநில அரசுகளின் நிதியால் ரூசா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, இங்குள்ள மிகப் பழமையான நூல்கள் டிஜிட்டல் வடிவம் பெற்றுவருவதாகவும் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
தற்போது நூல்களை வாசிக்கின்ற பழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலர் கைப்பேசியின் மூலம் நூல்களை தரவிறக்கம் செய்து படிக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இணையதளத்தின் மூலமாக அவரவர் வீட்டிற்கே நூல்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்ற அடிப்படையில் இப்பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என தெரிவித்துக் கொள்வதாக வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படிங்க:'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை!