மதுரை சித்திரைத் திருவிழாவின் நிறைவு நிகழ்வான கள்ளழகருக்கு பூப்பல்லாக்கு நிகழ்வு, அட்டவணையின்படி மே 9ஆம் தேதி நடைபெற வேண்டும். கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாகப் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
இதன் காரணமாக மதுரையின், புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவும் இந்தாண்டு ரத்துசெய்யப்பட்டது. ஆனாலும், மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் மண்டூக முனிவருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வும் அந்தந்தக் கோயிலின் வளாகத்திற்குள் நடத்தப்பட்டு, அவை இணையதளங்களின் மூலம் நேரலை செய்யப்பட்டன.
இருந்தபோதும் பக்தர்களின் ஆர்வம் காரணமாக வைகையாற்றில் முடி இறக்கம் செய்தல், கள்ளழகர் உருவம்செய்து வழிபடுதல் என ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அட்டவணையின்படி மே 9ஆம் தேதி இரவு நடைபெறவேண்டிய பூப்பல்லாக்கு நிகழ்வை, மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பக்தர்களும், இளைஞர்களும் இணைந்து எளிமையான முறையில் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்த காவல் துறையினர், பொதுமக்களைக் கலையச் சொல்லி அறிவுறுத்தினர். கள்ளழகரின் வருகை மதுரையில் நிகழவில்லையென்றாலும், ஒவ்வொரு பக்தனின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் அழகர் ஏதோ ஒருவகையில் வந்துதான் சென்றிருக்கிறார் எனப் பூப்பல்லாக்கு நிகழ்வைக் கண்டு ரசித்த பக்தர் ஒருவர் பரவசத்துடன் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தயாராகும் 400 தனிமைப்படுத்தப்படும் இடங்கள்!