மதுரை: இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த முத்து கணேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளது, அருள்மிகு ஸ்ரீ ஆதிகோரக்கநாதர் சாமி கோயில். இந்த கோயில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் கடந்த கோயில் ஆகும். குறிப்பாக, இந்த கோயில் ஒரே சமூகத்திற்கு சார்ந்த கோயில் எனக் கூறப்படுகிறது.
இந்த சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோயில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்னை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் கோயில் இருந்து வருகிறது.
தற்போது கோயிலில் இந்து அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த பணிகளோ அல்லது நன்கொடைகளோ வசூலிக்க அதிகாரம் இல்லை. இந்த கோயிலில் தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கண்காணிப்பில் அய்யனார் என்பவர் கோயில் ஆய்வாளராக இருந்து வருகிறார்.
இரு பிரிவினருக்கு இடையே கோயில் அறங்காவலர் நியமனம் குறித்து பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் 'திருப்பணி' வேலைகளை கோயில் ஆய்வாளர் அய்யனார் செய்து வருகிறார். இது விதிகளுக்கு எதிரானது.
கோயில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடர்ந்து பணி நடைபெறுகிறது. எனவே கோயிலில் எந்த பணியும் நடத்தக்கூடாது என தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பிடி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் என்பவர், கோயில் உள்ளே திருப்பணி வேலைகள் செய்து வருவதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி திருப்பணி குறித்து இடைக்கால தடை விதித்திருந்த போதிலும், நீதிமன்ற உத்தரவை மீறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் எவ்வாறு திருப்பணி வேலை செய்கிறார் என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த நிலை தொடர்ந்தால் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கோயில் ஆய்வாளர் அய்யனார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி, கோயிலில் எந்த பணிகளும் நடைபெறக் கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.