கடந்த 1996ஆம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இவ்வழக்கின் தீர்ப்பு 26 ஜுலை 2001ஆம் தேதி வழங்கப்பட்டது. இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2008 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று, மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினர்.
அதன் பிறகு, இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'இந்த சிறப்பு அமர்வு, இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்டது. ஆனால், வழக்கின் மனுதாரர் ஆஜராகவில்லை. ஆகவே, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவுகளாக பிறப்பிக்கப்பட்டவை அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுகின்றன' என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
முன்னதாக, இந்த மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மதுரையில் தொடர் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க : 'காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் இந்தாண்டே நிதி ஒதுக்க வேண்டும்'