மதுரையில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனுமதிக்கப்படும் நண்பர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அதேநேரம் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மதுரையில் நேற்று 101 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 330 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஒன்பது பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, மதுரையில் மட்டும் 11 ஆயிரத்து 689 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 549 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 276 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு சுகாதாரத் துறையுடன் இணைந்து மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு காய்ச்சல் கண்டறியும் முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற காரணத்தால் மதுரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரை வந்த தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தான் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.