கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்து மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஆட்சியர் டி ஜி வினய், ”மதுரை மாநகராட்சியில் 13 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளாக உள்ளன. அவற்றில் நரிமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிபந்தனைத் தளர்வு செய்யப்படுகிறது. அனுமதி பெற்ற கடைகள் மற்றும் தொழிற்கூடங்கள் போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கப்படும்.
கட்டுப்படுத்தபட்ட பகுதியில் உள்ள ஊழியர்களைப் பணிகளுக்கு அழைக்கக்கூடாது. ஆன்மிகத் தலங்கள், அரசியல், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், தங்கும் விடுதிகள், மால்கள், பியூட்டி பார்லர்களுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. திருமணம், இறப்பு ஆகியவை தொடர்பாக ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடரும். அத்தியாவசியப் பொருள்களான வேளாண் உற்பத்தி, வங்கி, தொழிற்சாலைகள், மருத்துவக் கூடங்கள், குடிநீர், சரக்கு வாகனங்கள் ஆகியவை செயல்பட அனுமதி உள்ளது.
தொழில் சார்ந்த பகுதிகள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவிகித பணியாட்களுடன் செயல்பட அனுமதி உண்டு. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக் வேலைகளில் ஈடுபடுவோர் அந்தந்த பகுதி வட்டாச்சியர்களின் அனுமதியுடன் பணியாற்றலாம். மொபைல், மோட்டார் பழுது நீக்க சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி உண்டு. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு சேவைகளுக்கு அனுமதி உள்ளது. மதுரை மாவட்டத்தில் தனிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. தங்கும் விடுதிகள், ஃபேன்சி ஸ்டோர், நகைக் கடைகள், திருமணத் தகவல் மையம், பழைய பேப்பர் கடைகள், செருப்புக் கடைகள், ஜவுளி கடைகள், சாலை உணவகங்கள், தேநீர் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், புத்தகக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், சமுதாயக் கூடங்கள், அடகுக் கடைகள், ரெடிமேட் விற்பனை கடைகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள், கேட்டரிங் உள்ளிட்டவை செயல்பட மதுரை மாநகராட்சியில் அனுமதி கிடையாது.
காய்கறி, பலசரக்குக் கடைகள் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி உள்ளது. ஹார்டுவேர் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி உண்டு. மதுரை வாடிப்பட்டி டெக்ஸ்டைல்ஸ் பார்க்கிற்கு சமூக இடைவெளியுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு அங்குள்ள ஜவுளி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து போதிய அனுமதியுடன் சிறு, குறு தொழில்களை மேற்கொள்ளலாம். அதற்கு தனி அனுமதி தேவையில்லை.
பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் வாகனங்களுக்கு அனுமதி பெற்று இயக்கலாம். தொழிற் கூடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மாவட்டத்தில் தினசரி 300 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கர்ப்பிணிகளுக்கு உதவிட, நடமாடும் சுகாதார ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. கர்ப்பிணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதோடு, அவர்களது உடல்நலன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கோயம்பேட்டிலிருந்து மதுரைக்கு இதுவரை 9 பேர் வந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மதுபானக் கடைகளில் போதிய சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும். இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்லக் கூடாது. அரசு ஊழியர்களில் வாகன வசதி இல்லாதவர்களுக்கு, வாகன வசதிகள் செய்து தரப்படும்.
மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 35 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று ஏற்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். கரோனாவுக்கு சிகிச்சையளிக்க மாவட்டத்தில் மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2281 வெளி மாநிலத்தவர்கள் கண்டறியப்பட்டு தற்போது அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திறக்கப்பட்ட கடைகளை மூடிய நெல்லை மாநகராட்சி!