மதுரை: சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வரும் உதவி சிறை அலுவலர்களான ஜவகர் மற்றும் முனிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரால் பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘பொங்கல் பதக்கம்’ வழங்கப்படும். இந்த பதக்கம், மதுரை மத்திய சிறை மற்றும் அதன் கிளை சிறைகளில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர்கள் ஒன்பது பேருக்கும் வழங்கப்பட்டது.
இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி தலைமையில், சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணன் முன்னிலையில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பதக்கம் வென்ற சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை அணிவித்தும் சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறைத்துறை காவலர்கள் சார்பில் மத்திய சிறையில் உள்ள மைதானத்தில் காவலர்கள் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின்னர் மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்ட கம்பளி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவற்றை சிறைத்துறை துணைத் தலைவர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதித்தால் மோதல்கள் ஏற்படலாம் - உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மறுஆய்வு மனு