மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை செல்லக்கூடிய சாலை நான்கு வழிச்சாலையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கட்டிடங்கள் நான்கு வழி சாலையின் இரண்டு புறங்களிலும் அமைந்துள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதனால், அங்கு பாலம் கட்ட வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பாக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை பாலம் கட்டும் பணிக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, வடபழஞ்சி விளக்கு பகுதி முதல் ஐடி பார்க் அமைவிடம் வரை பாலம் அமைக்கும் வேலையானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 52 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.
ஆனால், நாட்டில் வேகமாகப் பரவத் தொடங்கிய கரோனா வைரசைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பாலம் கட்டுமான வேலைகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 52 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பணியானது, தற்போது மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில், குறைந்த ஆட்களைக் கொண்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் ரோபோ - மதுரையில் அறிமுகம்