மதுரை: தென்காசி பஜார் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பாக அதன் தலைவர் ஹாஜா மைதீன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தென்காசி பஜார் ஜும்மா பள்ளிவாசல், தென்காசி பழைய நீதிமன்றம் அருகே அமைந்துள்ளது. 1968ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், தற்போது பழமையான நிலையில் உள்ளது.
பள்ளிவாசலை மராமத்துப் பணிகள் மேற்கொள்ள தென்காசி நகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கோரி ஜமாத் சார்பில் பல முறை மனு அளித்தும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. மராமத்துப் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும், அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
இதனை தொடர்ந்து, தற்போது இருக்கும் பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றி புதிய பள்ளிவாசல் கட்டலாம் என்று ஜமாத் சார்பாக முடிவு செய்யப்பட்டது. அப்போது ஜமாத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் இடம் அருகே உள்ளது. அதனை பள்ளிவாசலுக்கு கொடுத்து விட்டு, தற்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளவதாக ஒப்புக் கொண்டனர்.
மேலும், அதனை ஜமாத் நிர்வாகம் சார்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது பள்ளிவாசல் உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி பெற்று, பின்னர் கட்டடம் கட்டிக் கொள்வதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரு வேறு இடத்தை பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதி கோரி நகராட்சி நிர்வாக ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆனால் மனு மீது எவ்வித பதிலும் இல்லை. எனவே, பள்ளிவாசல் இடத்தை வேறு நபர்களுக்கு கொடுத்து, அவர்கள் இடத்தை பெற்றுக்கொள்ள பரிவர்த்தனை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மனு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசரானைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து நகராட்சி நிர்வாக ஆணையத்தின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சனாதனம் குறித்த சர்ச்சைப் பேச்சு; உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!