மதுரையை சேர்ந்த பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் முத்துக்குமார், அழகர்சாமி, பாண்டியன், ஹரிஹர சுதன், உள்ளிட்ட 52 பேர் மீது கரிமேடு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மதுரையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. ரத யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மதுரை மாநகர் காவல் ஆணையர் அனுமதி பெற்று ரதயாத்திரை நடத்தினோம்.
ரதயாத்திரை கடந்த 20.02.22 அன்று, மதுரை விசாகா பள்ளி அருகே உள்ள சண்முகம் பிள்ளை தெருவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அளவுக்கு அதிகமாகத் தொண்டர்கள் பங்கேற்றதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது என்று கூறி ரதயாத்திரையில் பங்கேற்ற முத்துக்குமார், அழகர்சாமி, பாண்டியன், ஹரிஹர சுதன், உள்ளிட்ட 52 பேர் மீது கரிமேடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது உள் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும், எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று (ஏப்ரல்.28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிக்கக் கடந்த 20.3.22. அன்று ரதயாத்திரையில் பங்கேற்ற முத்துக்குமார், அழகர்சாமி, பாண்டியன், ஹரிஹர சுதன், உள்ளிட்ட 52 பேர் மீது கரிமேடு காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ரதயாத்திரையில் பங்கேற்ற அனைவரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோடநாடு வழக்கு - அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரரிடம் விசாரணை