மதுரை: புளூகிராஃப்ட் பதிப்பகம் 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் அண்மையில் நூல் வெளியிட்டது. அந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கர் சிந்தனையை அடிப்படையாக கொண்டவை எனவும், பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் கண்டு அம்பேத்கரே பெருமைபட்டிருப்பார் எனவும், குறிப்பாக மோடி, அம்பேத்கர் இருவரும் இந்தியாவிற்காக பல கனவுகளை கண்டவர்கள் என எழுதியுள்ளார்.
மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும், அம்பேத்கரின் லட்சிய பயணமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியைப் பற்றி நூல் இது எனவும் அதில் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளன. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அண்மையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, இந்தியாவின் ஆகச்சிறந்த இசைமேதை இளையராஜாவை அவமதிப்பதா? எனக் கேட்டு கண்டனம் தெரிவித்து, இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மதுரை மாநகர் முழுவதும் அம்பேத்கர், மோடி இருவரது கரங்களையும் இளையராஜா பற்றிக்கொண்டு நிற்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் "மதம், சாதி, மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும்.. இளையராஜாவும் கூட," என எழுதப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: படித்த மேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிடுவது நல்லது அல்ல - கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!