மதுரை: கரூர் அருகே கடவூர் சிந்தாமணிபட்டியில் நடைபெற உள்ள கோயில் திருவிழாவிற்காக ஆடல், பாடல் அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கடவூர் சிந்தாமணிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கரூர் கடவூர் சிந்தாமணிப்பட்டி பகுதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது, கரகம் பாவித்தல் மற்றும் ஆடல் நிகழ்வு நடைபெறுகிறது. எனவே, ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது தொடர்பாக மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஆடல் - பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொது நல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. மனுதாரர் ஆடல், பாடலுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்க வேண்டும்.
அவ்வாறு மனு அளித்த 7 நாட்களுக்குள் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா, இல்லையா என தெரிவிக்க வேண்டும். ஆனாலும், மனுதாரர்கள் இந்த உத்தரவை பின்பற்றாமல், மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பாக பொது நல வழக்காக தாக்கல் செய்கின்றனர்.
எனவே, இனி ஆடல் - பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தால், அந்த மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். தற்போது ஆடல், பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
முன்னதாக, விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, “கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல், கரகாட்டம் மற்றும் கலாச்சார நாடக நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், அதனை அடுத்த 7 நாட்களுக்குள் காவல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால், அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்” என உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆடல், பாடல் குறித்த புதிய மனுக்களை விசாரிக்க தேவை இல்லை - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து