மதுரை: திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் ஹோமியோபதி மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று உதவி மருத்துவ அலுவலராக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. நவம்பர் 10ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நான் ஏற்கனவே திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாறுதல் வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்காலிகமாக அங்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். தமிழ்நாடு அரசு இடமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்தும், மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனக்கென ஒரு பணியிடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் அமர்வு முன்பாக இன்று (நவ.26) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்தலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ஆனால் கலந்தாய்வின் இறுதிமுடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி வழக்கு குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இணை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி