மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க பொருளாளர் ராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில், இந்தியா முழுவதும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை டிஜிட்டல் முறையில்தான் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது. அனலாக் சிக்னலைத் தவிர்த்து டிஜிட்டல் சிக்னலாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில், சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனலாக் முறையில் கேபிள் டிவி சேவையை வழங்கி வருகின்றனர். இதுபோல் மத்திய அரசின் உத்தரவை மீறி செயல்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு, அனலாக் முறையில் கேபிள் டிவி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கக் கூடாது என தபால் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Deep fake: மக்களை அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்..! போலியாக உருவாக்கப்பட்டதை கண்டறிவது எப்படி?