மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் சூசை என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “1997ஆம் ஆண்டு முதல் ஈழத் தமிழர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ஒருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஈழத் தமிழர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள பிற ஈழத் தமிழர்களின் முகாமில் இருக்கும் கிரிக்கெட் அணியினரும் வருகை தர உள்ளனர். எனவே லேனா விளக்கு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீடு மனு; நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
இந்த மனு இன்று (செப்.26) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி புதிய மனு ஒன்றை காவல் துறையிடம் வழங்க வேண்டும். மேலும் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான விதிமுறைகள், விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகளான தங்கும் இடம், கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்ய வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி, கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: “ஒரு லட்சம் பேர் அரசு முத்திரைகளை விதிகளை மீறி பயன்படுத்தி உள்ளனர்” - தமிழ்நாடு அரசு தகவல்!