மதுரை: தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரை சேர்ந்த கண்ணன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வடக்கு பகுதியை சேர்ந்த முத்துராமன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சேவல் சண்டை போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த போட்டியை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தவுள்ளோம்.
சேவல் சண்டை போட்டி
சேவலின் கால்களில் கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருள்கள் மாற்றப்படாமல் வெறும் கால்களில் சேவல் சண்டை போட்டி நடத்தப்படும்.
சேவல் சண்டை போட்டி நடத்தப்படும் இடத்தில் சேவல்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்க விலங்கியல் மருத்துவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே, சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தனர்.
பட்டியலிட உத்தரவு
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சேவல் சண்டை போட்டி தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் பட்டியலிட்டு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முதன்மை அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மழலையர் பள்ளிகள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டி கோரிக்கை