மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெர்டின் ராயன் மற்றும் சிதம்பரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்கு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH 38 அமைந்துள்ளது. இந்த நான்கு வழிச்சாலை, தூத்துக்குடியின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி விமானை நிலையம் அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியானது, தூத்துக்குடியில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரமும், நெல்லையில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தினந்தோறும் இந்த சுங்கச்சாவடிகளில், இந்த வழி மார்க்கமாகச் செல்லும் வாகனங்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலை, முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றைக் கடக்கிறது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக, மிக மோசமான நிலையில் உள்ளதனால், ஒருவழிப்பாதையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை சீர் செய்யவும், கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சுங்கச் சாவடியில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.26) மீண்டும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 15 நாட்கள் ஆகியும் சுங்கசாவடியில், ஒரு நாள் கூட நீதிமன்ற உத்தரவை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிட்டப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், "நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு 50 சதவீத சுங்கக் கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை இன்னும் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் மீண்டும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஒரு நாள் கூட நிறைவேற்றாத நிலையில், சுங்கச் சாவடியில் 50 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, சுங்கச் சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது. ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு, பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள். அப்போதுதான் இடைக்கால தடை, திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்" எனக் கூறி வழக்கை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: “ஒரு லட்சம் பேர் அரசு முத்திரைகளை விதிகளை மீறி பயன்படுத்தி உள்ளனர்” - தமிழ்நாடு அரசு தகவல்!