மதுரை: விருதுநகர் மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விருதுநகர் மாவட்டத்தில் 1,500 பட்டாசு ஆலைகளுக்கும் மேல் உள்ளது. பெருமளவு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பல்வேறு விதமான வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது.
இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இதனால் 2012ஆம் முதல் கடந்தாண்டு வரை ஒன்பது பெரும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. 43 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் அப்பாவி தொழிலாளர்களே உயிரை இழக்கின்றனர். ஆகவே ஐஏஎஸ் அதிகாரி (இந்திய ஆட்சிப் பணி) தலைமையில் சிறப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, முன்பு நேற்று (மார்ச்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பாட்டாசு ஆலைகள் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிதாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சென்னை மேயராக பதவியேற்றார் பிரியா...!