மதுரை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்தார். அதில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, விக்ரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் சந்தோஷ் இருவரும் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினர் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது புகார் அளித்த காரணத்தால் விக்ரமசிங்கபுரம் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற சிறுமோதல் சம்பவத்தில் என் மீதும், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்
எனவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் சந்தோஷ் தெரிவித்திருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவினை விசாரித்த நீதிபதி சந்தோஷ்-க்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!