மதுரை: வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்த மனைக்கு உரிய தொகையை பல ஆண்டுகளாக நிர்ணயிக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் கடந்த 2005 ஆம் ஆண்டில் எனக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. அதற்கான இறுதித்தொகையை முடிவு செய்யாமல் இழுத்தடித்தனர். 10 ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டில் அப்போதைய மார்க்கெட் விலையை செலுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஏற்புடையதல்ல, இதுதொடர்பான உத்தரவை ரத்து செய்து, 2005 ஆம் ஆண்டின் திட்டத்தின்பேரில் உரிய தொகையை செலுத்த அனுமதித்து, கிரையப் பத்திரத்தை செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 11 செ.மீ. மழை பெய்திருந்தாலும்...1 மணி நேரத்திற்குள் மழைநீர் வடிந்து விட்டது - அமைச்சர் கே.என்.நேரு..
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி
வழக்கு 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக மனுதாரரின் மனைக்கு இறுதித்தொகையை நிர்ணயிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த வழக்கு தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. வருகிற 6ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக தங்கள் வாக்குறுதிகளை காப்பி அடித்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!