மதுரை: மதுரை தபால்தந்தி நகரைs சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மதுரை தபால்தந்தி நகரில் நான் குடும்பத்தினரோடு வசித்து வருகிறேன். எனது 16 வயது மகள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எனது மகள் திடீரென மாயமான நிலையில், அவரை பல இடங்களில் தேடியபோது அவர் திருப்பூரைச் சேர்ந்த கெளதம் என்பவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, திருப்பூர் சென்று காவல்துறை உதவியோடு மகளை மீட்டு மதுரைக்கு அழைத்து வந்ததோம்.
இந்த நிலையில் எனது மகளை மீண்டும் காணவில்லை. இது குறித்து கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தற்போது வரை எனது மகளை மீட்டுத் தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தனது மகளை மீட்டு ஒப்படைக்குமாறு ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கொடுத்த புகாரில் மகள் காணவில்லை என்று மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டவிரோதமாக அல்லது தடுப்பு காவல்படுத்தப்பட்டு உள்ளார் என மனுவில் கூறவில்லை.
எனவே, சட்டவிரோத காவல்படுத்தப்பட்டு உள்ளார் என்றால் மட்டுமே ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், இந்த வழக்கில் ஆட்கொணர்வாக விசரனைக்கு மனு உகந்தது அல்ல எனக்கூறிய நீதிபதி, மனுவை மாற்றி ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!