மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் தென்கால் கண்மாய் விவசாயிகள் சங்கம், கிராமத்தினரிடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவியவந்த நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழு மேர்பார்வையில் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக மதுரை தெற்கு வட்டாட்சியர் அனிஸ்சர்தார் தலைமையில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளைப் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான கமிட்டியை தேர்வு செய்ய கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தினர்களும் வரும் 30ஆம் தேதிக்குள் உறுப்பினர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும் 31ஆம் தேதிக்குள் கிராமப் பொதுக்கமிட்டி குழு உருவாக்கப்பட்டு போட்டி நடத்தபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கிராமத்தினர், அனைத்து கிராமத்தினரும் பேச்சுவார்த்தையில் உடன்பட்டுள்ளதாகவும், ஜனவரி 15ஆம் தேதி போட்டி நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும், அரசு அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி வரும் 30ஆம் தேதிக்குள் உறுப்பினர்கள் குறித்து தகவல் வழங்கப்படும். 31ஆம் தேதி அமைக்கப்படும் கிராம கமிட்டி குழு முடிவாகியப் பின்னர் போட்டி குறித்த முடிவு செய்யப்படும் என்றனர்.
இதையும் படிங்க : கேரள ஆளுநருக்கு மாணவர்கள் எதிர்ப்பு