மதுரை: மேலூர் அருகேயுள்ள புகழ் பெற்ற அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளும், 7 கலசங்களும் கொண்டு, 120 அடி உயரம் கொண்டதாகும். மலைகளின் பின்னணியில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த கோபுரத்திற்கு இன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.
நிரந்தரமாக அடைக்கப்பட்டிருக்கும் இந்த கோபுர வாசல் கதவில் கருப்பண்ணசாமி உறைவதால், இது பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோபுரம் எனவும் அழைக்கப்படும். இந்த கோபுரத்திற்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்துவதற்காக, கடந்த 2022 மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின.
ரூ.2 கோடி மதிப்பீட்டில் பழமையான முறைப்படி கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு நடைபெற்ற புனரமைப்பு பணிகளால் கோபுரம் புதுப்பொலிவு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 3ஆம் தேதி குடமுழுக்கிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நேற்று, அழகர்கோயில் மலையில் இருந்து நூபுரகங்கை தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, 8 யாகசாலை ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. மேலும், நேற்றிரவு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யபட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித தீர்த்தம் கோவிலை வலம் வந்து, கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின் சரியாக 9.45 மணியளவில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று, புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்திற்கும், கோயில் வளாகம் முழுவதும் மலர் தூவப்பட்டது.
விழாவைக் காண தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோஷம் முழங்க பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். பக்தர்கள் புனித நீர் பெறுவதற்கு ஏதுவாக, ஆங்காங்கே செயற்கை நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டிருந்ததால், தள்ளுமுள்ளு இன்றி தரிசனம் செய்தனர். மேலும், பல்வேறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்தக் கோயிலுக்கு கடைசியாக 2011ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. அதன் பின்னர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கோலகலாமாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. செயற்கை பாதங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்!