மதுரை மாவட்டம் தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இப்பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக தமிழக வருவாய்த் துறை மூலமாக 224.24 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை அமைய உள்ள பகுதியின் வரைபடம் தயார் செய்யப்பட்டது.
மேலும், இந்த மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அப்பகுதியைச் சுற்றிலும், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக இரண்டு மாதத்திற்கு முன்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதற்காக 12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்படும் எனவும் இதற்காக 1,500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக 5.5 கி.மீ சுற்றளவிற்கு ஆறு அடி நீளம் கொண்ட பள்ளங்கள் தோண்டப்பட்டு அவை கான்கிரீட் கலவைகளால் நிறப்பப்பட்டுள்ளது. அதன் மேலே 10 அடி உயரம் கொண்ட கான்கிரீட் சிலாப்புகள் பொருத்தப்பட உள்ளன. தற்போது வரைக்கும் 25க்கும் மேற்பட்ட கான்கிரீட் சுவர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையால் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: 'றெக்கை கட்டி பறக்கும் தமிழ்' - இனி தமிழ் மொழியிலும் விமான அறிவிப்புகள்