மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் வெளிப்புற நோயாளிகள் துறை, எம்பிபிஎஸ் மருத்துவர் சேர்க்கை அனுமதிகோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்குவதற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சரவை வெளியிட்டது.
இதில், 2018ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2,000 கோடி ரூபாயில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 85 விழுக்காடு நிதியை (JICA) ஜப்பானிய நிறுவனம் வழங்க உள்ளது. 15 விழுக்காடு நிதியை ஒன்றிய அரசு வழங்க உள்ளது.
இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உத்திரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் வெளிப்புற நோயாளிகள் துறை தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜார்கண்ட், அசாம், குஜராத் மற்றும் ஜம்மு ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், எம்பிபிஎஸ் மருத்துவர் சேர்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை வெளிப்புற நோயாளிகள் துறையோ, எம்பிபிஎஸ் படிப்பிற்கான சேர்க்கையோ எதுவும் தொடங்கப்படவில்லை.
எனவே, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 'ப்ராஜெக்ட் செல்'லை உருவாக்கி, அதில் இயக்குநர், மருத்துவக் கண்காணிப்பாளர், இணை இயக்குநர், நிர்வாக அலுவலர் உள்பட பலரை நியமனம் செய்ய வேண்டாம். தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் துறை, எம்பிபிஎஸ் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அரசு சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடங்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு தரப்பில் தற்காலிக வெளிபுற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான திட்ட வரைவு எதுவும் அனுப்பப்படவில்லை. இதுகுறித்து திட்ட வரைவு மத்திய அரசிடமிருந்து கொடுக்கப்பட்டால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ”எய்ம்ஸ் இயக்குநர் திருப்பதியில் செய்தியாளர்களை சந்திக்கும்பொழுது தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூன்று வார காலம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, மத்திய அரசு விரைவாக பதில் மனு தாக்கல் செய்தால், பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 30ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் : இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கட்டும் - ராம்தாஸ்