மதுரை தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு இடங்களில், கடந்த இரண்டு தினங்களில் செல்போன் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டதன் பேரில், தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நாகராஜன், ரோந்து காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதனிடையே, மேலமடை சோதனை சாவடி அருகே இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியான மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், வாகனத்தில் வந்த ஒருவர் பாண்டிகோவில் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த பாலுவின் மகன் முத்துப்பாண்டி (19) என்றும், மற்ற இரண்டு நபர்கள் சிறுவர்கள் எனவும் தெரியவந்தது.
இவர்கள் கூட்டாகச் சேர்ந்து செல்போன் வழிப்பறி குற்றச் சம்பவங்களை செய்தவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மூவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்கள் வந்த இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : அனுமதியின்றி மது விற்பனை செய்த மூவர் கைது: 1500 பாட்டில்கள் பறிமுதல்!