மதுரை ஒபுளா படித்துறையில் பொது மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை தலைநகராக இருந்தாலும் அரசியல் தலைநகராக மதுரையே திகழ்கிறது. மதுரையை 2ஆவது தலைநகராக மாற்ற வேண்டும் என்பது எம்ஜிஆரின் விருப்பம். மதுரையை 2ஆவது தலைநகராக மாற்றவே உலகத் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். ஜெயலலிதா அரசியல் சார்ந்த முடிவுகளை மதுரையில் வைத்தே எடுப்பார்.
மதுரையை 2ஆவது தலைநகராக அமைக்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையை மையப்படுத்தி வளர்ச்சிப் பணிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதால் 2ஆவது தலைநகர் கோரிக்கை எழுந்துள்ளது. கட்சிக்குள் பேதம் இல்லை, ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். கூட்டணி இப்போதைக்கு தொடர்கிறது. தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
திருச்சியை 2ஆவது தலைநகராக மாற்ற எம்ஜிஆர் நடவடிக்கைகள் எடுக்கும்போது எதிர்ப்புகள் கிளம்பியதால் மதுரையை 2ஆவது தலைநகராக மாற்ற வேண்டும் என அறிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா எண்ணத்தையே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்லி உள்ளார். மதுரையை 2ஆவது தலைநகராக மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்" என கூறினார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும்' - ஆர்.பி. உதயகுமார்