மதுரை ரயில் நிலையத்தின் முன்பாக ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர், அருகே மீனாட்சி பஜார் வாசலில் சந்தேகத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது, ரூ. 52 லட்சம் மதிப்பிலான பிரேசில் நாட்டுப் பணத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அந்த வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்தது உசிலம்பட்டியைச் சேர்ந்த கருணாமூர்த்தி எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பழைய (காலாவதியான) வெளிநாட்டுப் பணத்தை மாற்றி மோசடியில் ஈடுபட இருந்த கருணாமூர்த்தியின் கூட்டாளிகளான ராஜேந்திரன், திருமாவளவன், ராமர், உதயகுமார், மகாலட்சுமி உள்ளிட்ட 10 பேரை திலகர்திடல் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக மாற்றும் கும்பல் என்பது தெரியவந்தது. மேலும், வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவர இவர்களுக்கு யாரெல்லாம்? உதவி செய்தார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.