மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையான புனிதத் தலங்களை உருவாக்கும் முயற்சியில் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள புனிதத் தலங்களில் தூய்மையான 10 தலங்களைத் தேர்வு செய்து அதற்கு விருது வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி, 2018ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இரண்டாம் பரிசை பெற்றுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 25 நவீன கழிவறைகள், குப்பையைத் தரம் பிரித்து வழங்குதல், குப்பைத்தொட்டிகள், கோயிலைச் சுற்றி நெகிழிப் பைகள் தடை, 24 மணிநேரம் துப்புரவுப் பணியாளர், நவீன இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர், பக்தர்களை அழைத்துச் செல்லும் நவீன பேட்டரி வாகனங்கள் என மதுரை மாநகராட்சி சார்பாகவும் கோயில் நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்காரணமாக இந்த ஆண்டும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு இரண்டாவது முறையாக மத்திய அரசால் தூய்மை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இந்த விருதினை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், மத்திய அமைச்சர்கள் ஸ்ரீ கஜேந்திரசிங் செகாவத், ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.