மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1982-ம் ஆண்டில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். 1989-ம் ஆண்டில் அவரது பணி அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் பதவி உயர்வுக்காக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். 2006-ம் ஆண்டில் அவருக்கு பதவி உயர்வு அளித்து, அதற்கு ஒப்புதல் தரும்படி தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்துக்கு கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்தது. ஆனால் அதை நிராகரித்து தொழில்நுட்பக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு பதவி உயர்வு அளிக்கும்படி கனகராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு 53 வயதாகிறது. எனவே தகுதியின் அடிப்படையில் அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு, " இந்த மேல்முறையீட்டு மனுவில் எந்த தகுதியும் இல்லை. ஏற்கனவே இதே கல்லூரியில் ஆசிரியர்கள் பதவி உயர்வு கேட்ட வழக்கில், அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகியுள்ளது..
இந்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சின் உத்தரவின் அடிப்படையில் கனகராஜின் வழக்கில் தனிநீதிபதி தனது முடிவை எடுத்து உள்ளார். அவர் வேறு கோணத்தில் இந்த விவகாரத்தை பார்க்கவில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை 15 நாட்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு செலுத்த வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.