விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், எங்கள் பகுதியில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் வைத்து பல சேவைகள் செய்து வருகின்றோம். எங்கள் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டும் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் கரோனா தொற்றால் இந்தாண்டு கொண்டாட இயலவில்லை.
இதனால் சிலைக்கு நான்கு பேர் மட்டுமே வாகனங்களில் செல்லவும், அரசு விதிகளின் படி குறைந்தளவே பக்தர்கள் கலந்து கொண்டு சிலைகளை கரைக்க எடுத்துச் செல்கிறோம் என அனுமதி கோரியிருந்தோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையில், செப்டம்பர் 13ஆம் தேதி நாங்கள் வைத்த சிலைகளை எடுத்து சென்று கரைத்து விட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் கரைப்பதற்காக திட்டமிட்டிருப்பது கரி நாளாக உள்ளது. இது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல். எனவே, இதை தடுத்து நிறுத்த வேண்டும். வேறு ஒரு நாட்களில் நாங்களே எடுத்துச் சென்று கரைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிலைகளை வைத்தவர்களே அரசின் விதிகளுக்குட்பட்டு கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடித்து, செப்டம்பர் 16ஆம் தேதி விநாயகரை எடுத்துச் சென்று கரைத்துக் கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால் உரிய அலுவலர்கள் கண்காணித்து கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.