மதுரை : மதுரையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை ஆக்கிரமிப்பு என மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் மதுரை மாநகராட்சி ஆணையர் விரிவான பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக அலுவலகம்
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை பீபி குளத்தில் திமுக இளைஞரணி நற்பணி மன்றத்தின் சார்பாக கட்சியின் அலுவலகம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.
இந்த அலுவலகம் இடம் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது. இதற்காக மாநகராட்சிக்கு முறையாக இன்று வரை வரி செலுத்தி வரப்படுகிறது. இந்த அலுவலகம் தற்போது திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரும் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம்.
அகற்ற முயற்சி
இந்நிலையில் இந்த பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவின்படி எங்களது அலுவலகத்தையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த அலுவலகம் நீர்நிலை புறம்போக்கு இல்லை முற்றிலும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. எனவே அலுவலகக் கட்டடத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இடைக்காலத் தடை
இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இட விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் மதுரை மாநகராட்சி ஆணையாளரும் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : விஷாலுக்கு எதிரான வழக்கு- லைகா நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!