தமிழ்நாட்டில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கால் மூடப்பட்டுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் பாதிப்பில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் மடீட்சியா சங்கத் தலைவர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, 'நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு, சேவை வரி, குறைவான தொழில் வளர்ச்சி, முழு அடைப்பு நடவடிக்கையால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய 30 விழுக்காடு மானியத் தொகை வழங்க வேண்டும். ஆறு மாத காலத்திற்கான வட்டி, தண்ட வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற பிரச்னையில் இருந்து மீள்வதற்காக நிதித்துறையில் இருந்து ஆறு மாதங்களுக்கான கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தள்ளிவைக்க வேண்டும்.
தொழிலாளர் வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு ஆகியவற்றுக்கு தொழில் நிறுவனங்கள் தவணைத் தொகை கட்டுவது ஆறு மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அரசின் சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் உள்ள கேட்கப்படாமல் இருக்கின்ற நிதியான சுமார் 1.50 ஆயிரம் கோடியிலிருந்து நிறுவனங்களின் முழு சம்பளத் தேவைகளை மானியமாக வழங்க வேண்டும். மின் நிலைக்கட்டணங்களையும் குறைந்த கட்டணத்தையும் வசூலிக்காமல் மின் விதிகளின் அடிப்படையில் உபயோகிக்கப்பட்ட மின்சாரத்திற்கு மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து இதுவரை நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளாக வைத்துள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க... சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி - அரசு அறிவித்த விலக்கு எங்கே?