நுாறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்தார்.
இந்த பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதி வழியாக சிவகங்கைக்கு தேர்தல் பரப்புரைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த பேரணியை பார்த்த அவர், பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி கல்லூரி மாணவர்களுடன் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து சிறிது நேரம் உரையாற்றினார். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.