கடந்த மே 1ஆம் தேதி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் பல்வேறு தன்னார்வலர்களின் உதவியோடு 'மாமதுரையின் அன்னவாசல்' என்ற பெயரில் வறியோர்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவோடு மே 10ஆம் தேதி முதல் முட்டையும் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு சமைத்து சாப்பிட வழியின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடம் சென்று தருகின்ற முயற்சியினை கடந்த மே 1 ஆம் தேதி "மாமதுரையின் அன்னவாசல்" என்ற பெயரில் தொடங்கினோம்.
கொடையாளர்களின் பொருளுதவியோடு, இருநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் நாள்தோறும் மூவாயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். நோய் எதிர்ப்பாற்றல், இந்த ஒற்றைச் சொல்தான் இன்றளவில் கரோனாவிற்கு எதிரான உலகின் ஒரே ஆயுதம்.
தடுப்பூசிகள் வரும் வரை, வைரஸைக் கொல்லும் மருந்து வரும் வரை, வைரஸ் தானே சென்று வருகிறேன் என சொல்லும் வரை, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மட்டும்தான் நம்மை பாதுகாக்கும். அந்த எதிர்ப்பாற்றலுக்கான அடிப்படை உணவு, எதிர்ப்பாற்றலை வெள்ளையணுக்கள், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள் வழியே இன்னும் நவீன உலகம் இதுகாறும் கண்டறியாத ஒவ்வொரு வழியிலும் எடுத்துத் தர நாம் அறிந்த ஒரே உணவு புரதம் மட்டும்தான்.
அந்தப் புரதத்தை முழுமையாகக் கொடுக்கும் மிக முக்கிய உணவு முட்டை. எனவே, வருகின்ற மே 10 ஆம் தேதி (ஞாயிறு) முதல் 'மாமதுரை அன்னவாசலில்' முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜுன் மாதத்தில் அட்டவணை வெளியீடு!