மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "வளர்ந்துவரும் நவீன காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாதனமாக உள்ளது. செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவருகின்றன.
கடன்பெறுவதற்கான, பல்வேறு செயலிகள் புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. செல்போன் செயலி மூலம் கடன்பெறுபவர்களிடம் அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது.
செல்போன் செயலிகளில் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்டத் திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை. கடன்களைச் சரியாகச் செலுத்தவில்லை எனில், அவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் செயலியில் உள்ள உறுப்பினர்களுக்குப் பகிர்வது, செல்போன் மூலம் தொடர்புகொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக, கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குச் செல்கின்றனர். கூகுள் செயலி மூலம் பஜாஜ்பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உள்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகள் இதுபோன்ற கடன்களை வழங்கிவருகின்றன.
இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் செயலியில் கடன்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது. கடன் வழங்கும் பல செயலிகள் சீனா போன்ற நாடுகளோடு கூட்டுவைத்து மறைமுகமாகச் செயல்படுவது தெரியவருகிறது. இதனால் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ரிசர்வ் வங்கி இணையதளம், செயலி மூலம் கடன் வழங்குபவர்களை முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோதமாகச் செயல்படும் கடன் செயலிகளுக்குத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு மார்ச் 1ஆம் தேதிவரை கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டல்: முன்ஜாமின் வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு!