மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்க செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.
அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவர், இருப்பினும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. ஆகவே தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 5 வருடங்களில் வெளிமாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியில் படித்து தமிழ் வழி சான்றிதழ் காண்பித்து வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? பட்டப்படிப்பு முடித்து டிஎன்பிஎஸ்சி 20 விழுக்காடு தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை நபர்கள்?
இதில் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்று 20 விழுக்காடு தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? தொலைதூர கல்லூரிகளில் கல்வி கற்று 20 விழுக்காடு தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் சரியாக பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: குழு அமைக்காத அரசுகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு