மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் (எ) ரஞ்சித். இவரது மனைவி ஹேமலதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ராமநாதன், தனது மனைவி ஹேமலதாவையும், மணிகண்டனையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் ராமநாதனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மணிகண்டனும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மீர்கான் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரும் திருமங்கலம் ரயில் நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ராமநாதனை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் வீசி உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், முருகன், அஜ்மீர்கான், வெங்கடேஷ், ஹேமலதா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில், மணிகண்டன், அஜ்மீர்கான், வெங்கடேஷ் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நாகலட்சுமி தீர்ப்பளித்தார். ராமநாதனின் மனைவி ஹேமலதாவுடன், முருகனும் விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:ஒரே பெண்ணுடன் இருவருக்குத் தொடர்பு - இளைஞர் குத்திக்கொலை!