தல்லாகுளம் போலீஸார் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் மனு! - காவல்துறை
மதுரை: பூங்காவில் இருந்த காதலர்களை பிடித்த சென்ற போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.
மதுரையில் உள்ள இராஜாஜி சிறுவர் பூங்காவில், காதலர்கள் என்ற பெயரில் சிலர் அத்துமீறி நடப்பதாக காவல்துறையினர் தொடர் புகார் வந்ததையடுத்து, கடந்த 3ம் தேதி தல்லாகுளம் காவல் துறையினர் பூங்காவில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த காதல் ஜோடிகளை பிடித்தது.
தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில், மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் புகார் அளித்தனர். அந்த மனுவில், காவல்துறையினரின் இந்தச் செயல் மனித உரிமை மீறல் செயலாக உள்ளது. இதுதொடர்பாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
காதலர் தினத்தின்போது, அவர்களுக்கு எதிராக சில அமைப்பினர் செயல்படுவது போல தற்போது காவல்துறையினர் நடந்துள்ளனர். அதனால் சம்பந்தப்பட்ட தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தனர்.