முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த மேலக்கோட்டையில் தனது மகன் துரை தயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரியை மு.க. அழகிரி நிறுவியுள்ளார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோயில் இடத்தை ஆக்கிரமித்ததாக அழகிரி மீது புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அழகிரி, சம்பத், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் சம்பந்தப்பட்ட அழகிரி, சம்பத், சேதுராமன், சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மேலும் அழகிரி எம்.பி.யாக இருந்தபோது தனது வேட்புமனுவில் சொத்துக்களை கணக்கில் காண்பிக்காத காரணத்திற்காக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் இன்று அழகிரி ஆஜரானார்.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: நில அபகரிப்பு வழக்கில் திமுக மாநில நிர்வாகி கைது!