திருநெல்வேலி: இந்திய ரயில்வேயின் மைல் கல்லாக அமைந்துள்ள வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இதில், காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.
இந்த நிலையில் இன்று (நவ.16) காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் சாம்பாரில் வண்டுகள் செத்து கிடந்துள்ளதை கண்டு பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பயணி அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் உணவு குறித்து நடிகர் பார்த்திபன் புகார்... ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை!
ஆனால், ரயில்வே ஊழியர் இது வண்டு இல்லை, சாம்பாரில் உள்ள சீரகம் என்று கூறியுள்ளார். இதனால் பயணிகள் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள், வால் அனைத்தும் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து, சாம்பாரில் இறந்து வண்டுகள் மிதந்து இருப்பதை பயணிகள் வீடியோ எடுத்து புகார் அளித்துள்ளனர். தற்போது இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி முருகன் வீடியோவில் கூறியதாவது: “என் பெயர் முருகன், நான் நாங்குநேரியில் இருந்து வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்கிறேன். காலை 7:30 மணிக்கு உணவு வழங்கினர். அதில், சாம்பாரில் 3 வண்டுகள் இருந்தது. அதனை சக பயணாளிகளிடம் தெரிவித்தேன். தொடர்ந்து, இது குறித்து நான் ஊழியரிடம் கூறுகையில் அது வண்டு இல்லை, சீரகம் என்று கூறினர். இதனையடுத்து, நாங்கள் அது வண்டு என்பதை உறுதி செய்ததை அடுத்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வந்தே பாரத் ரயிலில் உணவிற்காக மட்டும் ரூ.200 வசூல் செய்கின்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இத்தைகைய ரயிலில் வழங்கப்படும் உணவு, பயனுள்ளதாக இல்லை. தரமான உணவை வழங்க வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்