கோயம்புத்தூர்: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் எனக் கூறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று (நவம்பர். 15) தொடங்கினர்.
கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹல்லி (பெங்களூரு) வரை 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ள இந்த திட்டத்தின் கீழ், கோவையிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப்பட உள்ளது.
இதனால், ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என அஞ்சி பல்வேறு கட்ட எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "எண்ணெய் குழாய் பதிப்பதால் நிலத்தடி நீர் மாசுபடும். விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படும். இதன் விளைவாக நிலத்தின் மதிப்பு குறையும். இந்த திட்டத்தை மாற்று வழியில் அரசு செயல்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: தேர்தல் வழக்கு: ராபர்ட் ப்ரூஸ் தரப்பு விளக்கமளிக்க உத்தரவு!
சாலையோரம் இந்த குழாய்களை பதிப்பதன் மூலம் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளது,” என்றார்.
இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் தற்போது தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்