மதுரை : கன்னியாகுமரியைச் சேர்ந்த மனாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”கதர் கிராமத் தொழில்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கான இயக்குநர், உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான தேர்தல் இன்று (அக்.22) நடப்பதாகவும், இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (அக்.23) நடைபெற உள்ளாதகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் என்னுடைய வேட்புமனு ஏற்கப்படவில்லை . இதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ஏற்கப்படவில்லை. என் வேட்புமனு ஏற்கப்பட்டதா என எனக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டு புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ”கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம். வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம். ஆனால், தேர்தல் முடிவு குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து கதர் கிராமத் தொழில் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மார்த்தாண்டம் தேனி வளர்ப்போர் சங்கச் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.