தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் 15ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். இதைத் தொடர்ந்து சேர்மன், துணை சேர்மன் பதவிகளுக்கு கடந்த ஜனவரி 11ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தபட்டபோது, தேர்தல் அலுவலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ஜனவரி 30ஆம் தேதி சேர்மன் பதவிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு,தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. ஆனால், துணை சேர்மன் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. துணை சேர்மன் பதவிக்கு மார்ச் 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்துவதற்கு, 7 நாள்கள் முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், அறிவிப்புக்கு எவ்வித விதியையும் பின்பற்றவில்லை. எனவே மார்ச் 4ஆம் தேதி நடக்கவிருக்கும் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை சேர்மன் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தும், தேர்தல் விதிப்படி துணை சேர்மன் தேர்தல் நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ச் 4ஆம் தேதி கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை சேர்மன் பதவிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்விக்கு நாங்கள்தான் காரணம்’ - அமமுக மா.செ. பேச்சு