தமிழர்களின் தொன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், தமிழக தொல்லியல்துறை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கீழடி ஏழாம் கட்ட ஆய்வு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தினை கண்டறிய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொல்லியல் அகழாய்வுகள்
1. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் - சிவகங்கை மாவட்டம்
2. ஆதிச்சநல்லூர் அதனை சுற்றியுள்ள பகுதிகள் - தூத்துக்குடி மாவட்டம்
3. சிவகளை அதனை சுற்றியுள்ள பகுதிகள் - தூத்துக்குடி மாவட்டம்
4. கொற்கை அதனை சுற்றியுள்ள பகுதிகள் - தூத்துக்குடி மாவட்டம்
5. கொடுமணல் - ஈரோடு மாவட்டம்
6. மயிலாடும்பாறை - கிருஷ்ணகிரி மாவட்டம்
7. கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு - அரியலூர் மாவட்டம்
தொல்லியல் கள ஆய்வுகள்
1. புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை,
சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு
2. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தினை கண்டறிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வு
தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறையால் 2020-2021ஆம் ஆண்டில் கோரப்பட்டுள்ள அனைத்து அகழாய்வுகள், கள ஆய்வுகளுக்கும் மத்திய தொல்லியல் துறையின் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவின் ஒப்புதல் கடந்த 05.01.2021 அன்று பெறப்பட்டுள்ளது. 2020-2021ஆம் ஆண்டில் தற்போது மேற்கொள்ளப்படவுள்ள தொல்லியல் அகழாய்வுகள், கள ஆய்வுகளின் மூலம் பண்டையத் தமிழகப் பண்பாட்டுப் பெருமையினை மீட்டெடுக்கும் நீண்ட அறிவியல் சார்ந்தமைந்த செயல்பாட்டின் முக்கிய படிக்கல் ஆகும்.
தொல்லியல், நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது. எனவே, கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும் அக்கறை கொள்ளவும் நமது பன்முகங் கொண்ட வளமையான பண்பாட்டினை உலகிற்கு அறியச் செய்யவும் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன என்றும், அதன் மூலம் நமது மேன்மைக்கும் அறிவுக்கும் வளம் சேர்த்து இறுதியாக தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்திட தற்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ள தொல்லியல் அகழாய்வுகள், கள ஆய்வுகள் பேருதவியாக அமைந்துள்ளன"
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:கீழடியை பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்