கரூர்: கரூர் மாவட்டம் மாயனூரைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், " கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் தாயனூர்வரை உள்ள 50 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் உள்ள நீர் ஆதாரங்கள் இப்பகுதியில் உள்ள விவசாய, குடிநீர் பயன்பாட்டிற்கு உதவி வருகிறது.
இந்நிலையில், இந்த 50 கிலோ மீட்டர் தூரம்வரை உள்ள வாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக வாய்க்காலின் கரைகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால், சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவித்து வருகிறது.
தற்போது, இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியிலும் மரங்கள் வெட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் இந்த நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் ஆதாரம் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதனை தடை செய்ய வேண்டும் என நான் வனத்துறை செயலாளர், கரூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து வனத்துறை செயலாளர், திருச்சி, கரூர் மாவட்ட ஆட்சியர்கள், பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: தெற்காசியாவின் சாக்ரடீசா தந்தை பெரியார்? - பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு!