மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகின்ற 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதுவரை இந்த தொகுதியில் போட்டியிட ஆண் வேட்பாளர்கள் 58, பெண் வேட்பாளர்கள் 4 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 63 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் மூன்றாம் பாலினமான பாரதி கண்ணம்மாவின் வேட்புமனுவில் சாட்சி கையாளுதலில் போதிய விவரம் இல்லை எனக் கூறி மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது வேட்புமனு நிராகரித்தற்கான காரணம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் எனக்கூறி திருநங்கை பாரதி கண்ணம்மா கண்ணகி வேடமணிந்து கையில் சிலம்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது, தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே எனது வேட்புமனுவை நிராகரித்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.